பலரைக் காட்டிலும் சிம்பு ஒளிவுமறைவு இல்லாமல் பேசுபவர் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. பாரதிராஜா, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரண், பிரேம்ஜி அமரன், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான் கரோனா அச்சத்தால் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னைக்குத் திரும்பியது படக்குழு.
'மாநாடு' படத்தின் ஷூட்டிங் நடைபெறவில்லை என்பதால் படக்குழுவினர் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் எங்கு படப்பிடிப்பை நடத்தலாம் என்ற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தனக்கு சிம்பு எந்த அளவுக்கு நண்பர் என்பதை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"என்னுடைய முதல் படத்திலிருந்து சிம்புதான் என் முதல் சினிமாத் துறை நண்பர். இப்போது வரை நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத மரியாதை வைத்துள்ளோம். இந்தத் துறையில் இருக்கும் பலரைக் காட்டிலும் சிம்பு ஒளிவுமறைவு இல்லாமல் பேசுபவர். 'ராட்சசன்' பட ஷூட்டிங்கின்போது சினிமா குறித்த பல விஷயங்களையும், நடிப்பின் நுணுக்கங்களையும் சிம்பு எனக்குக் கூறினார்".
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.