தமிழ் சினிமா

கமல் எழுதியுள்ள கரோனா விழிப்புணர்வுப் பாடலின் வரிகள்

செய்திப்பிரிவு

கரோனா விழிப்புணர்வுக்காக கமல் எழுதியுள்ள பாடலின் வரிகள் முழுமையாக வெளியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். திரையுலகப் பிரபலங்கள் சார்பில் பொதுமக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வுக்காக வீடியோக்கள், குறும்படங்கள், பாடல்கள் என வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது கரோனா விழிப்புணர்வுக்காக பாடல் ஒன்றை எழுதி, இயக்கியுள்ளார் கமல்ஹாசன். திங்க் மியூசிக் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். இந்தப் பாடலை மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா, யுவன், அனிருத், சித்தார்த், முகென், சித் ஸ்ரீராம், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர். இதன் வீடியோ வடிவம் நாளை (ஏப்ரல் 23) காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடலுக்கு ’அறிவும் அன்பும்’ என்று பெயரிட்டுள்ளார் கமல்.

தற்போது அதன் பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார் கமல்.

அந்த வரிகள் பின்வருமாறு:

பொது நலமென்பது தனி மனிதன்‌ செய்வதே
தன்‌ நலமென்பதும்‌ தனி நபர்கள்‌ செய்வதே

பொது நலமென்பது தனி மனிதன்‌ செய்வதே
தன்‌ நலமென்பதும்‌ தனி நபர்கள்‌ செய்வதே

அலாதி அன்பிருந்தால்‌
அனாதை யாருமில்லை

அடாத துயர்‌ வரினும்‌
விடாது வென்றிடுவோம்‌

அகண்ட பாழ்‌ வெளியில்‌
ஓர்‌ அணுவாம்‌ நம்முலகு -
அதில்‌
நீரே பெருமளவு.
நாம்‌ அதிலும்‌ சிறிதளவே

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு

சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு

சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

உலகிலும்‌ பெரியது
உம்‌ அகம்‌ வாழ்‌ அன்பு தான்‌

உலகிலும்‌ பெரியது
நம்‌ அகம்‌ வாழ்‌ அன்பு தான்‌.

புதுக்‌ கண்டம்‌ புது நாடு என வென்றார்‌ பல மன்னர்‌
அவர்‌
எந்நாளும்‌ எய்தாததை
சிலர்‌
பண்பால்‌ உள்ளன்பால்‌
உடன்‌ வாழ்ந்து உயிர்‌ நீத்து அதன்‌ பின்னாலும்‌
சாகாத உணர்வாகி உயிராகிறார்‌

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

அழிவின்றி வாழ்வது நம்‌ அறிவும்‌ அன்புமே

அழிவின்றி வாழ்வது
நம்‌ அறிவும்‌ அன்புமே

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

அழிவின்றி வாழ்வது நம்‌ அறிவும்‌ அன்புமே...

SCROLL FOR NEXT