தமிழ் சினிமா

'வாடிவாசல்' படத்தின் இசைப் பணிகள் தொடக்கம்: ஜி.வி.பிரகாஷ் தகவல்

செய்திப்பிரிவு

சூர்யா - வெற்றிமாறன் இணையும் 'வாடிவாசல்' படத்தின் இசைப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வெற்றிமாறனைப் பாராட்டினார்கள். ஆனால், அந்தப் படம் வெளியாகும் முன்பே, சூரி நாயகனாக அறிமுகமாகும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் வெற்றிமாறன்.

'அஜ்னபி' என்ற நாவலைப் படமாக்க எண்ணி திரைக்கதை பணிகளை எல்லாம் முடித்துவிட்டார் வெற்றிமாறன். ஆனால், கரோனா அச்சத்தால் அவர்களால் திட்டமிட்டபடி வெளிநாட்டில் படப்பிடிப்பைத் தொடங்க முடியவில்லை. இதனால், தற்போது தமிழகத்துள்ளேயே படமாக்குவது மாதிரி வேறொரு கதையைத் தயார் செய்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படம் 'வாடிவாசல்' நாவலைப் பின்னணியாகக் கொண்டதாகும். இந்தப் படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் 75-வது படமாகும்.

தற்போது கரோனா ஊரடங்கால் எங்கும் செல்ல முடியவில்லை என்பதால், வீட்டிலிருந்து தனது இசையமைக்கும் பணிகளைக் கவனித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

'வாடிவாசல்' படத்தின் இசைப் பணிகள் குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"எனது 75-வது படம் விசேஷமானதாக இருக்கும். 'வாடிவாசல்' படத்துக்கான இசை சம்பந்தமான முன் தயாரிப்பு வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. வெற்றி மாறன், சூர்யா, வி கிரியேஷன்ஸ் என எனது சக்திவாய்ந்த கூட்டணியுடன். படத்தின் ஒலி தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்".

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT