தமிழ் சினிமா

நடிகர்களிடம் வந்த விமர்சனங்கள்: 'லொள்ளு சபா' இயக்குநர்

செய்திப்பிரிவு

நடிகர்களிடம் வந்த விமர்சனங்கள் குறித்து 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார்.

இந்தியா முழுக்கவே கரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் பழைய ஹிட்டடித்த நிகழ்ச்சிகள், சீரியல்கள் என ஒளிபரப்பு செய்து வருகின்றன. இதில் விஜய் தொலைக்காட்சி மீண்டும் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை காலை 7.30 மணியளவில் ஒளிபரப்பு செய்து வருகிறது.

'லொள்ளு சபா' நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தொடர்பாக இயக்குநர் ராம்பாலா 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியொன்றை அளித்துள்ளார். அதில், 'லொள்ளு சபா' நிகழ்ச்சி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

அதில் "'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் போது நடிகர்களிடன் வந்த விமர்சனங்கள்" குறித்த கேள்விக்கு இயக்குநர் ராம்பாலா கூறியிருப்பதாவது:

"சில நடிகர்கள் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டார்கள். ஒரு சில நடிகர்கள், இயக்குநர்களே அவர்களது படம் 'லொள்ளு சபா'வில் எப்படி இருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். ஒரு முறை நான் நடிகர் கார்த்தியைச் சந்தித்தேன். அவர் லொள்ளு சபாவின் பெரிய ரசிகர் என்று சொன்னார். சிவகார்த்திகேயனும் தான்.

அவ்வப்போது நடிகர் சங்கத்திலிருந்து சேனலுக்கு கடிதம் வரும். ஒவ்வொரு முறை புகார் கடிதம் வரும்போது நாங்கள் சில வாரங்கள் வேறு யோசனைகளைச் செயல்படுத்துவோம். பின் நாங்கள் எம்ஜிஆர், சிவாஜி படங்களை நையாண்டி செய்தோம். ஆனால் மக்களுக்கு அது புரியவில்லை. விஜய் அல்லது அஜித் படமென்றால் அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. ஆரம்பத்தில் சேனல் தரப்பு சுதந்திரமாக விட்டது. ஆனால் காலப்போக்கில் நிறையக் கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டது.

சேனலுக்குத் தேவையான ஆரம்பப் புகழை, பெயரை, லொள்ளு சபாதான் பெற்றுத் தந்தது என்பதை இன்றும் நான் பெருமையுடன் கூறுவேன். பல நிகழ்ச்சிகள் லொள்ளு சபாவை விட இன்னும் பெரிய வெற்றியடைந்திருக்கலாம். ஆனால் லொள்ளு சபா என்கிற எண்ணெய் தான் அந்த என்ஜின் இயங்க உதவியது"

இவ்வாறு இயக்குநர் ராம்பாலா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT