மனைவியைப் பிரிந்ததிற்கு ஜுவாலா கட்டா தான் காரணம் என்று வெளியான செய்திக்கு விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளார்.
விஷ்ணு விஷால் - ரஜினி தம்பதியினர் 2018-ம் ஆண்டு அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றனர். அதற்குப் பிறகு ஜுவாலா கட்டாவுடன் பழக்கம் ஏற்பட்டு, விரைவில் அவரைத் திருமணம் செய்யவுள்ளார் விஷ்ணு விஷால்.
இதனிடையே, மனைவி ரஜினியைப் பிரிந்ததிற்கு ஜுவாலா கட்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் தான் காரணம் என்று செய்திகள் வெளியானது. மேலும் சிலர் 'ராட்சசன்' படத்தில் நடித்த போது அமலா பால் ஏற்பட்ட பழக்கம் என்று தெரிவித்தார்கள்.
இந்த இரண்டு தகவலுக்குமே விஷ்ணு விஷால் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியொன்றில் "ஜுவாலா கட்டாவினால் நான் என் மனைவியைப் பிரிந்து விட்டேன் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் 'ராட்ச்சன்' பட சமயத்தில் நான் அமலா பாலோடு இருந்ததாகச் சொல்கின்றனர்.
அவர்கள் கூறுவது பொய் என நிரூபிக்க என்னுடைய பிரிவின் உண்மையான காரணத்தை என்னால் கூற இயலாது. அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வாழ்க்கையைப் பற்றித் தெரியாமலேயே பலர் கருத்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.