தமிழ் சினிமா

தமிழ்ப் புத்தாண்டு அன்று அடுத்த அறிவிப்பு: லாரன்ஸ் 

செய்திப்பிரிவு

தமிழ்ப் புத்தாண்டு அன்று தனது அடுத்த கட்ட உதவிகள் குறித்து அறிவிப்பதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (ஏப்ரல் 11) நிலவரப்படி தமிழகத்தில் 969 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால், ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்ய பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளதாகவும் லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார். மேலும், இந்த 3 கோடி ரூபாயில் யாருக்கு எவ்வளவு என்ன விவரத்தையும் வெளியிட்டு இருந்தார்.

ஆனால், அதனைத் தொடர்ந்து இன்னும் தனது உதவிகளை விரிவுபடுத்தவுள்ளதாகவும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் பலரும் இன்னும் தன்னிடம் உதவிகள் கேட்டு வருவதாகவும், இதற்காகவே தனது ஆடிட்டரிடம் பேசிவருவதாகவும், மாலை 5 மணிக்கு இது குறித்து அறிவிப்பதாக நேற்று (ஏப்ரல் 11) காலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால், தனது ஐடியாக்கள் குறித்து ஆடிட்டரிடம் கலந்து ஆலோசித்ததாகவும் அவர் இன்னும் 2 நாட்கள் கேட்டுள்ளதாக மாலை 5 மணிக்கு தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். மேலும், இந்த அறிவிப்பு ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

SCROLL FOR NEXT