'ரவுடி பேபி' பாடல் அனைத்து வகையிலும் சேர்த்து யூ-டியூப் தளத்தில் 100 கோடிப் பார்வைகளை எட்டியுள்ளது.
‘ஒய் திஸ் கொலவெறி’ தொடங்கி, சமூக காணொளித் தளங்களில் சாதனை படைத்த தற்கால சினிமா பாடல்கள் பல. ஆனால், ‘மாரி 2’ படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடலின் சாதனை முறியடிக்க முடியாத ஒன்றாகத் தொடர்கிறது.
தற்போதைய நிலவரப்படி 81 கோடியே 80 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி தன வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்தப் பாடல். இன்னொரு பக்கம், அதன் லிரிக் வீடியோ 8 கோடியே 80 லட்சம் பார்வைகளையும், மேக்கிங் வீடியோ 1 கோடியே 70 லட்சம் பார்வையாளர்களையும், அதன் புரோமோ வீடியோ 60 லட்சம் பார்வையாளர்களையும் இதுவரை எட்டிப்பிடித்துள்ளன. இந்த மொத்த பார்வையாளர்களையும் கூட்டினால் அதன் எண்ணிக்கை 92 கோடியைத் தாண்டுகிறது.
இதில் இன்னொரு ஆச்சரியம், இது ரவுடிபேபி தமிழ்ப் பாடலின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மட்டுமே. தெலுங்கில் வெளியான ‘மாரி 2 படத்தின் ரவுடி பேபி’ பாடலுக்கும் அட்டகாசமான வரவேற்பு கிடைத்தது. அதில் வீடியோ பாடலுக்கு 3 கோடியே 43 லட்சம் பார்வையாளர்களும், லிரிக் வீடியோவிற்கு 1 கோடியே 85 லட்சம் பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர்.
தொடர்ந்து ஆடியோ இணையதளங்களில் மட்டும் மொத்தமாக 7 கோடி முறைக் கேட்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இவற்றையும் கணக்கில் கொண்டால் 'ரவுடி பேபி’ பாடல் 100 கோடியைக் கடந்து விட்டது. இந்தப் பாடலை வைத்து உலகின் பல்வேறு நாடுகளில், மொழிகளில் உருவாக்கப்பட்ட கவர் வெர்சன்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது மற்றொரு ஆச்சரியம்!