தமிழ் சினிமா

கரோனா வைரஸ் பாதிப்பு: நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மளிகை சாமான் வழங்கிய விஷால்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பால் படப்பிடிப்பு இல்லாமல் அவதிப்படும் நடிகர்களுக்கு மளிகை சாமான்கள் வழங்கியுள்ளார் விஷால்.

கரோனா வைரஸ் அச்சத்தால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு சார்பில் நிதியுதவிகள் வாங்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு உதவ நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி வழங்கி வருகிறார்கள்.

இதனிடையே, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் சென்னையைச் சேர்ந்த சுமார் 1500 பேருக்கு, ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்கள் கொடுத்து உதவி செய்துள்ளார் விஷால். இந்த மளிகைப் பொருட்களை நடிகர் ஸ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் இருவரும் வழங்கினார்கள். வெளியூரில் உள்ள உறுப்பினர்களுக்கு இந்தமாதிரியான மளிகைப் பொருட்களைக் கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

இது தவிர்த்து 300 திருநங்கைகளுக்கும் மளிகை சாமான்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றைத் தடுப்பதற்காகக் கையுறை 1000, முககவசம் 100 ஆகியவை துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளை விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி செய்துள்ளார்.

SCROLL FOR NEXT