வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வைபவ். அதனைத் தொடர்ந்து ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘ஆம்பள’, உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்', ‘சிக்ஸர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது ‘காட்டேரி', ‘லாக் அப்', ‘ஆலம்பனா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது ட்விட்டர் பக்கத்தை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
ட்விட்டரில் வைபவின் ரசிகர் ஒருவர், ஒரு பதிவில் வைபவைக் குறிப்பிட்டு, ''என் மகள் உங்களின் தீவிர ரசிகை. ஒரு நாளைக்கு நூறு முறை ‘வைபவ் அங்கிள்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார். அவள் பேசியவற்றை இணைத்து ஒரு வீடியோ உருவாக்கியுள்ளேன். இவை அனைத்தும் பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்டவை. உங்களுடைய வீடியோ பதில் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். சிறுமி தியா உங்களை நேசிக்கிறாள்'' என்று கூறியிருந்தார். இந்தப் பதிவைப் பலரும் வைபவின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வைபவ், ரசிகைக்குப் பதிலளிக்கும் விதமாக அதோடு ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய வைபவ், ''இப்படி ஒரு குட்டி ரசிகை எனக்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அம்மா அப்பாவை தொல்லை செய்யாமல் வீட்டில் இருங்கள். வெளியே நிலைமை சரியில்லை. பாதுகாப்பாக இருங்கள். வைபவ் அங்கிள் உங்களை நேசிக்கிறார்'' என்று கூறியுள்ளார்