தமிழ் சினிமா

சீண்டிய ரசிகர்கள்: எச்சரித்த கிருஷ்ணா

செய்திப்பிரிவு

ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் சீண்டவே, அவர்களை எச்சரிக்கும் விதமாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கிருஷ்ணா.

அஜித்துக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். இவரது தம்பி கிருஷ்ணாவும் நடிகராக இருக்கிறார். விஷ்ணுவர்தனின் தம்பி என்பதாலே இவர் அஜித் ரசிகராக சமூக வலைதளத்தில் அடையாளம் காணப்படுகிறார்.

இதனிடையே, ஏப்ரல் 9-ம் தேதி வெளியிடப்பட்ட 'மாஸ்டர்' போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து "'மாஸ்டர்' எப்போது வந்தாலும் மாஸ்டர்தான். காத்திருப்பதிலும் ஒரு த்ரில் இருக்கே. மாஸ்டருக்கு நம்ம காத்திருப்பது தானே மரியாதை" என்று தெரிவித்தார்.

உடனே அஜித் ரசிகர்கள், "விஜய் 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகச் செய்தி, ஒரு 10 கோடி கரோனாவுக்கு நன்கொடை கொடுப்பாரா" என்று கேள்வி எழுப்ப, அதற்கு விஜய் ரசிகர்களும் பதிலளிக்க அது சண்டையாக மாறியது.

சில ரசிகர்கள் இதர நாயகர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்ட, அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் கிருஷ்ணா. இறுதியாக இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"எங்களுக்குத் தெரியாத கெட்டவார்த்தையா? உங்களிடம் விரல்கள் இருப்பதற்காக நீங்கள் டைப் செய்வதெல்லாம் உங்களை ஹீரோவாக ஆக்கிவிடாது. பாத்து பண்ணுங்க ஜி. இங்கே நாங்கள் அனைவரும் உங்கள் ஒவ்வொருவரையும் மதிக்கிறோம். அதை நாங்கள் திரும்ப எதிர்பார்ப்பதில்லை. உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் மரியாதையைக் கஷ்டப்படுத்த முயற்சிக்காமல் இருங்கள். ஒகேவா நான் சொல்வது. இரவு வணக்கம்".

இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT