தமிழ் சினிமா

மனோகரைப் போல யாரும் என்னைக் கடுப்பேற்றியதில்லை: 'லொள்ளு சபா' இயக்குநர்

செய்திப்பிரிவு

மனோகரைப் போல யாரும் என்னைக் கடுப்பேற்றியதில்லை என்று 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வெள்ளித்திரை, சின்னத்திரை என எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. தொடர்ச்சியான எபிசோட்கள் இல்லாத காரணத்தால், பழைய ஹிட்டடித்த சீரியல்கள், நிகழ்ச்சிகள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பி வருகிறது. இதுகுறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் இயக்குநர் ராம்பாலா.

அதில் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் சந்தானம் அதிக புகழ்பெற்றாலும் மனோகர்தான் நிகழ்ச்சியின் சொத்து என்று ராம்பாலா தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் மனோகர் குறித்து ராம்பாலா கூறுகையில், "அவனுக்கு மனசுல ஒண்ணும் இல்லை என்று தமிழில் சொல்வார்கள் இல்லையா. ஆனால், மனோகருக்கு மண்டைலயும் ஒண்ணும் இல்ல என்று சொல்வோம். மிகவும் அன்பானவர். எதுவுமே தெரியாது. அவருடன் பணியாற்றுவது மிகக் கடினம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு மூன்று சிகரெட்டுகள் வரை பிடித்துக் கொண்டிருந்த ராம்பாலா ஆரம்பித்த பிறகு செயின் ஸ்மோக்கராக மாறிவிட்டாராம். ரத்த அழுத்தமும் வந்துவிட்டதாம். அதற்கு மனோகர்தான் காரணம் என்று கிண்டலடிக்கிறார்.

"மனோகரைப் போல யாரும் என்னைக் கடுப்பேற்றியதில்லை. வசனங்களைச் சரியாகச் சொல்ல மாட்டார். நான் சொல்லிக் கொடுத்துவிட்டு இப்படித்தான் சொல்ல வேண்டும் என்பேன். ஆனால், இப்படித்தான் சொல்ல வேண்டும் என்பதையும் சேர்த்தே பேசுவார். ஒரு சின்ன காட்சிக்கு 30 டேக் வரை எடுப்பார். ஆனால் அதை நாங்கள் சகிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அவர்தான் அந்தக் காட்சியில் சொல்லி அடிப்பவராக இருப்பார்" என இப்போதும் சொல்லிச் சிரிக்கிறார் ராம்பாலா.

SCROLL FOR NEXT