தமிழ் சினிமா

கோவிட்-19 நிவாரண நிதிக்கு சன் டிவி குழுமம் ரூ. 10 கோடி நிதி

செய்திப்பிரிவு

சன் டிவி குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், கோவிட்-19 நிவாரண நிதியாக ரூ. 10 கோடியை அறிவித்துள்ளன.

கரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஊரடங்கால் எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுமே கடும் பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்து வருகிறது.

பொருளாதார நெருக்கடி மட்டுமன்றி, கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குமாறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

தற்போது, கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு சன் டிவி நிறுவனம் 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தேசத்தின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சன் குழுமத்தின் 6,000-க்கும் அதிகமான பணியாளர்கள், தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நிதியாகக் கொடுக்க முன் வந்துள்ளனர்.

இந்த ரூ.10 கோடி, பல்வேறு வகையில், இந்தியாவின் பல மாநிலங்களில் பிரித்து வழங்கப்படவுள்ளது.

* மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்கு நிதி

* வாழ்வாதாரம் இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக மற்றும் பல்வேறு கோவிட்-19 நிவாரணத்துக்காகப் பணியாற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுதல்

* தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய தினக்கூலி பணியாளர்களுக்கு நிதியுதவி

இதோடு சேர்த்து, சன் குழுமம், ஊடகம் உட்படத் தனது அனைத்து விதமான வளங்கள் மூலமும் இந்தியா மற்றும் இதர நாடுகளில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்"

இவ்வாறு சன் டிவி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT