கரோனா வைரஸ் பாதிப்பால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால், அவதியுற்று வரும் நடிகர்களுக்கு யோகி பாபு உதவி செய்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 550 பேரைத் தாண்டிவிட்டது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.
படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு சார்பில் நிதியுதவிகள் வாங்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கும் உதவும் பொருட்டு நிதியுதவி கோரினார்கள். பலரும் நிதியுதவி அளிக்க முன்வராத காரணத்தால் 15 லட்ச ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இதனிடையே நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கியுள்ளார் யோகி பாபு.
இதனைச் சிலருக்கு தன் கையாலேயே கொடுத்துள்ளார். மீதமுள்ள மூட்டைகள் அனைத்தையும் கஷ்டப்படும் நடிகர்களுக்கு விநியோகித்துவிடும்படி தெரிவித்துள்ளார்.