தமிழ் சினிமா

'போக்கிரி' படத்தைக் கலாய்த்ததால்தான் 'லொள்ளு சபா' நிறுத்தப்பட்டதா?- ராம்பாலா விளக்கம்

செய்திப்பிரிவு

'போக்கிரி' படத்தைக் கிண்டல் செய்ததால்தான் 'லொள்ளு சபா' நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, இயக்குநர் ராம்பாலா பதில் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி 'லொள்ளு சபா'. பிரபலமான திரைப்படங்களைக் கிண்டல் செய்வதே இந்த நிகழ்ச்சியின் தனித்துவம். ஸ்பூஃப் எனப்படும் நையாண்டியைத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபலமாக்கியது 'லொள்ளு சபா'தான்.

சந்தானம், ஜீவா, மதுமிதா, யோகிபாபு எனச் சமகால திரை நகைச்சுவை நட்சத்திரங்களுக்கு லொள்ளு சபாவே அறிமுக மேடையாக இருந்தது. இயக்குநர் ராம்பாலாவும் தற்போது திரைப்பட இயக்குநராகிவிட்டார்.

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் திடீரென இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான 'போக்கிரி' படத்தை 'பேக்கரி' என்ற பெயரில் கலாய்த்ததுதான் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டத்துக்குக் காரணம் என அந்நாட்களில் பேசப்பட்டது.

மேலும் 'போக்கிரி'யைக் கலாய்த்த அடுத்த வாரம், அதுவரை இல்லாத வகையில் விஜய் மற்றும் அவர் ரசிகர்கள் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறோம் என்ற அறிவிப்புடன் 'லொள்ளுசபா' ஒளிபரப்பானது. தற்போது இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார் நிகழ்ச்சியின் இயக்குநர் ராம்பாலா.

"ஆரம்பத்தில் எங்கள் விருப்பத்துக்குப் படங்களைக் கிண்டல் செய்ய விஜய் டிவி அனுமதித்தது. ஆனால் போகப் போக நிறையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டபோது இந்தப் பிரச்சினைகள் அதிகமாயின. நிர்வாகத்துக்குள் இருந்த அரசியல்தான் லொள்ளு சபா நிறுத்தப்படக் காரணம்" என்று ராம்பாலா கூறியுள்ளார்.

தற்போது கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் ரசிகர்களின் பொழுதுபோக்குக்காகப் பழைய 'லொள்ளுசபா' பகுதிகள் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT