தமிழ் சினிமா

வட தமிழகம் - தென் தமிழகம்; படம் பார்க்கும் மக்களின் மனநிலை: ராம் திரையரங்கம் ஒப்பீடு

செய்திப்பிரிவு

வட தமிழகம் மற்றும் தென் தமிழகம் இரண்டிலுமே மக்களின் படம் பார்க்கும் மனநிலை குறித்து ஒப்பிட்டு ராம் திரையரங்கம் ட்வீட் செய்துள்ளது.

தமிழகத்தில் ஒரு படம் உருவாகும் போதே, இந்தப் படம் ஏ சென்டரில் மட்டுமே வெற்றி பெறும். இந்தப் படம் பி, சி சென்டர் படம் என்றெல்லாம் பிரிப்பார்கள். இதன் மூலமே படத்தின் பொருட்செலவு மற்றும் சம்பளம் ஆகியவை முடிவு செய்யப்படுகின்றன.

ஏனென்றால், ஏ சென்டர் படம் என்பது வெறும் மல்டிப்ளக்ஸ் மக்களால் கொண்டாடப்படும் படம். பி, சி சென்டர் படம் என்பது கிராமப்புறம் வரை கொண்டாடப்படும் படம் என்று சொல்வார்கள். இதனை முன்வைத்து திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கம் சில ட்வீட்களை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"வட தமிழகத்துடன் ஒப்பிடுகையில் தென் தமிழகத்தில் திரைப்படம் (பார்க்கும் அனுபவம்) என்பது முற்றிலும் வித்தியாசமானது. மக்களின் விருப்பத்திலிருந்து தொடங்குவோம்.

பெரிய நடிகர்கள் இல்லாத திரைப்படங்களின் ஓப்பனிங் என்பது பெரும்பாலும் படத்தில் உள்ள பிரபலமான பாடலைச் சார்ந்திருக்கிறது. அந்த பாடல்தான் ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்கும். நானும் என்னுடைய குழுவினரும் தமிழ்நாட்டில் உள்ள பல தியேட்டர்களின் ஒலி அமைப்பைக் கவனித்திருக்கிறோம்.

குறிப்பாக சென்னையில் இருக்கும் மல்ட்டிப்ளக்ஸ்களில் ஒலியின் துல்லியம் அதிகமாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒலி அளவு மிகவும் குறைவாக இருக்கும். நம்மால் அதை இங்கே (தென் தமிழகத்தில்) கொண்டு வரமுடியும் ஆனால் படம் தொடங்கிய 10 நிமிடங்களில் ‘ஹேய் சவுண்டு வைங்கயா’ என்று யாரோ ஒருவர் கத்துவதை நாம் கேட்கலாம். எனவே இதுதான் இங்கிருக்கும் ரசிகர்களின் விருப்பம்.

நாம் டிடிஎஸ் அமைப்பிலிருந்து டால்பி அட்மாஸ்க்கு பரிணாமம் அடைந்துவிட்டோம். ஆனால் ஒவ்வொருமுறையும் பேஸ் அளவில் (bass) நாம் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் சர்ரவுண்ட் சிஸ்டத்தை அது பாதித்து விடாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். இங்கே மக்கள் தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றனர். பண்டிகை நாட்கள் அல்லது கோடை விடுமுறையின்போது மட்டுமே ஹாலிவுட் படங்கள் நன்றாக ஓடும். ஆனால் நேரடியாக வெளியாகும் இந்தி/ தெலுங்கு/ மலையாளப் படங்கள் மிகவும் அவதிப்படுகின்றன.

ஆனால், நம் சமூகவலைதள ரசிகர்களுக்காக சில படங்களை நேரடியாக வெளியிட்டோம். சென்னையில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு முதல் 4, 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே விற்றுத் தீர்ந்து விடுவதை நாம் பார்க்கலாம். ஆனால் இங்கே நிலைமை வேறு.

பொதுவாக முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று விடும். ஆனால், அடுத்த காட்சி அரங்கு நிறைவதற்குச் சற்று சிரமப்பட வேண்டும். முதல் நாளிலே கூட முக்கியக் காட்சிகள் மட்டுமே அரங்கு நிறையும். இந்த நிலைமை, என் அறிவுக்கு எட்டிய வரை 2010-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இருந்தது என்று நினைக்கிறேன்.

இந்த புதிய தலைமுறை குழந்தைகள் வளர்ந்தபிறகு அனைத்துமே மாறும். இப்போது 2018-க்கு பிறகு சென்னையைப் போல இங்கேயும் முதல் 4 நாட்களுக்கான காட்சிகள் விற்றுத் தீரும்".

இவ்வாறு ராம் சினிமாஸ் திரையரங்கம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT