மாற்றுத்திறனாளி ரசிகருடன் வீடியோ காலில் பேசியுள்ளார் கமல். அந்த ரசிகர் குறித்தும், கமல் நெகிழ்ந்த தருணமும் வீடியோவாக வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால், படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. இதனால், பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதனிடையே, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசுவது மட்டுமன்றி, ரசிகர்களுடனும் பேசி வருகிறார்.
இடுப்புக்குக் கீழே செயலிழந்த மாற்றுத்திறனாளி ரசிகரான போகன் என்பவருடன், ZOOM கால் மூலமாகப் பேசியுள்ளார் கமல். போகனால் சரியாகப் பேச முடியாத காரணத்தால் அவருக்கு அருகிலிருந்தவர்கள் வீடியோ காலில், "பயங்கரமான ரசிகர் சார் இவர். இவருக்கென்று TAB உள்ளது. அதை எப்போது ஓப்பன் பண்ணினாலும், உங்களைப் பற்றி மட்டும்தான் பார்ப்பார். முதலில் கிரிக்கெட், சீரியல் எல்லாம் பார்ப்பார்.
எப்போது நீங்கள் பிக் பாஸ் தொடங்கினீர்களோ, அப்போது முதல் உங்கள் ரசிகராக மாறிவிட்டார். அன்று முதல் எப்போதுமே TAB_ல் உங்களைப் பற்றித்தான் பார்க்கிறார். 24 மணிநேரமும் உங்கள் நினைப்பாகத்தான் இருக்கிறார்.
அவர் முதலில் வாக்காளர் அடையாள அட்டை ஏன் வாங்கினார் என்றால், டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களிக்கத்தான். பெரிதாக எங்கேயும் வெளியே போகமாட்டார். முதல் முறையாக உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தான் வாக்களிக்கவே சென்றார்” என்று பேசியுள்ளனர்.
அதற்குப் பிறகு கமல் கையெடுத்துக் கும்பிட்டு "நன்றி, நன்றி போகன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அதனைத் தொடர்ந்து கமலிடம் கேள்விகள் கேட்க வேண்டும் என்று பேச முயல்கிறார். அத்துடன் அந்த வீடியோ பதிவு முடிவடைகிறது.
கமலிடம் போகன் என்ன கேள்வி எழுப்பினார், அதற்கு கமலின் பதில் உள்ளிட்டவை இன்னும் வெளியாகவில்லை. கமலிடம் பேச வேண்டும் என்பது போகனின் ஆசை. அதை கமலிடம் தெரிவித்தவுடனே ஒப்புக்கொண்டு அவருடைய ஆசையை நிறைவேற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.