என்னைப் பற்றி நிறைய தவறான புரிதல்கள் உள்ளன என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்துப் பிரபலமானவர் தமன்னா. இதனைத் தொடர்ந்து இந்தியிலும் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். ஆனால், தென்னிந்திய மொழிகளில் பிரபலமானதைப் போல் இந்தியில் இவரால் பிரபலமாக முடியவில்லை.
ஒருசில இந்திப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்துள்ளனவா என்று அவரிடம் கேட்டபோது, "தென்னிந்தியத் திரையுலகத்திலேயே, நான் வெவ்வேறு வகையான படங்களில் நடிக்க வேண்டும் என்று முயல்கிறேன். ஒரு குறிப்பிட்ட வகை படத்தில் மட்டும் என்னை அடைத்து விடக்கூடாது என்பதற்காக, எனது நடிப்பில் பன்முகத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாலிவுட்டிலிருந்து நானே விலகியிருக்கிறேன்.
பன்முகத்தன்மை தான் இங்குப் பிழைத்திருக்க முக்கிய வழி. நான் என்றுமே சினிமா மீதி அதிக காதல் கொண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டும் நடிக்க வேண்டும் என்று என்னைக் கட்டுப்படுத்துக் கொண்டதில்லை. என்னைப் பற்றி நிறைய தவறான புரிதல்கள் உள்ளன.
எனக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்று நான் சமீபத்தில் படித்ததுதான் மிகவும் விந்தையான செய்தி. தெலுங்கில் இருப்பதுபோல இந்தியில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் பார்த்தேன். நான் ஒரு வருடத்தில் 365 நாட்களும் படப்பிடிப்பில் இருக்கிறேன். எனவே நான் வெவ்வேறு மொழிகளில் மாறி மாறி நடிக்க முடியாது. நான் எந்தப் போட்டியிலும் இல்லை. யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. எனக்கு நடிப்புதான் முக்கியம். எந்த மொழி என்பது முக்கியமல்ல" என்று தமன்னா கூறினார்.