திருமணம் செய்யவுள்ளதாகப் பரவி வரும் வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட 'மஹாநடி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
அவருடைய நடிப்புக்குப் பாராட்டுகள் குவிந்தது மட்டுமன்றி தேசிய விருதையும் வென்றார். தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. தொழிலபதிர் ஒருவரை அவரது வீட்டில் கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளையாகப் பார்த்திருப்பதாகவும், அதற்கு இவரும் சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பு மறுப்பு தெரிவித்தது. தற்போது தனது திருமண வதந்தி தொடர்பாகப் பேட்டியளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதில், "இந்தச் செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இது எப்படிப் பரவத் தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது என்னிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் இப்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.