தான் நடிகராக மாறியதற்குக் காரணம் ஹ்ரித்திக் ரோஷன் என்று நடிகர் அர்ஜெய் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கிராபிக்ஸ் டிசைனராக இருந்து நடிகராக மாறியவர் அர்ஜெய். விஷாலின் நட்பு கிடைத்து திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமானார். 'நான் சிகப்பு மனிதன்', 'நாய்கள் ஜாக்கிரதை', 'தெறி', 'சண்டக்கோழி 2' உள்ளிட்ட பலர் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
தற்போது தனது உடலமைப்பை மாற்றி, நடிகராக ஆனதற்குக் காரணம் ஹ்ரித்திக் ரோஷன் என்று ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:
"2006-ம் ஆண்டு, நான் டிஜிட்டல் ஊடகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். அங்கு என் கனவான நடிப்பைப் பற்றி நான் மறந்து விட்டிருந்தேன். அந்த இடத்தில் என்னுடன் பல வட இந்தியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு நாள் வேலை முடிந்து நான் வீட்டுக்குச் செல்லும்போது, இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குச் சென்று என்ன செய்யப் போகிறாய் என்று சொல்லி, என்னை அவர்களுடன் படத்துக்கு வரச் சொன்னார்கள். அப்போதுதான் நான் 'தூம் 2' பார்த்தேன்.
படத்தின் நாயகன் ஹ்ரித்திக் ரோஷன். அழகாக இருந்தார், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அவரது நடிப்பையும், நடனத்தையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை. படத்தை விட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் நடிப்பின் மீது எனக்கிருந்த ஆர்வம் ஆரம்பித்தது. எதற்காகச் சென்னை வந்தாய், இப்போது என்ன செய்கிறாய் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.
அப்போதுதான் நான் ஜிம்முக்குச் செல்வது என்று முடிவெடுத்தேன். அந்த முடிவுக்கு முதல் காரணம் ஹ்ரித்திக் ரோஷன். என் கிரேக்கக் கடவுள். எனது உந்துதல். திரைத்துறையில் நான் நடிகனாக நுழைய வேண்டும் என்று எனக்குள் ஆர்வத்தைத் தூண்டியவர். இன்று நான் 15 படங்கள் வரை நடித்திருக்கிறேன். நமக்குள் நாம் மாற்றத்தைக் காணவில்லை என்றால் ஏமாற்றத்தை மட்டுமே கண்டுகொண்டிருப்போம். ஒருநாள் கண்டிப்பாக நான் எனது கிரேக்கக் கடவுளைச் சந்திப்பேன்".
இவ்வாறு அர்ஜெய் தெரிவித்துள்ளார்.