விலகி நின்று ஒன்றிணைவோம், கரோனா வைரஸை ஒழிப்போம் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று என்பது நாளுக்கு நாள் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தத் தருணத்தில் எந்தவொரு பணிகயும் நடைபெறவில்லை என்பதால் திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
மேலும், பல்வேறு திரையுலகப் பிரபலங்களை விழிப்புணர்வுக்காகப் பேச வைத்து அந்த வீடியோவினை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. அவ்வாறு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கரோனா விழிப்புணர்வு ட்விட்டர் கணக்கில் தமன்னா பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"நம்மால் கோவிட்-19 வைரஸை எளிதாக ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள் தான். நாம் அனைவரும் இந்தத் தருணத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும். இப்போது அதுதான் நமக்குப் பாதுகாப்பு. கரோனா வைரஸிடமிருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கைகளில் மட்டுமே இருக்கிறது. அதனால் அரசாங்க உத்தரவுப்படி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுங்கள். விலகி நின்று ஒன்றிணைவோம். கரோனா வைரஸை ஒழிப்போம்".
இவ்வாறு தமன்னா பேசியுள்ளார்.
இந்த வீடியோ பதிவு தமிழ்ப் பயனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால், தமன்னா இந்த வீடியோவில் தமிழில் பேசியுள்ளார். பலரும் அவருடைய தமிழ்ப் பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.