தமிழ் சினிமா

பிரதமர் மோடியின் வேண்டுகோள்; 'வேலைக்காரன்' ஒற்றுமை: இயக்குநர் மோகன் ராஜா நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

'வேலைக்காரன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நினைவுகூர்ந்த அனைவருக்கும் இயக்குநர் மோகன் ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே பிரதமர் மோடி நேற்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர்வாசிகள் பலரும் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நினைவுகூர்ந்தார்கள். அந்தப் படத்தில் வேலைக்காரர்கள் நாம் ஒற்றுமையாக இருக்க, அனைவரும் இரவு 12 மணிக்கு இருக்கு இடத்தில் இருக்கும் அனைத்து லைட்டையும் ஆன் பண்ணுங்கள் என்று சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுப்பார். அதை முன்னெடுத்து இரவு 12 மணியளவில் அனைவரும் லைட்டை ஆன் பண்ணுவார்கள்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளும் இதே மாதிரி இருப்பதால், பலரும் 'வேலைக்காரன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நினைவுகூர்ந்தார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பதிவில், "ஆம்.. இந்தப் பிரச்சினையை வெல்ல ஒரு தேர்வுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் அது நமக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆனால் நமக்கு மத்தியில் நேர்மறை எண்ணங்கள் இருப்பதே இப்போதைய உடனடி தேவை. அதைத்தான் பிரதமர் மோடி நம்மிடம் கோரிக்கையாக வைத்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தின் லைட் அடிக்கும் ஐடியாவை நினைவுகூர்ந்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT