ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா, வெளியே எங்கும் நகர முடியாமல் வீட்டில் இருக்கும் இந்த காலகட்டம் தனக்கு பொன்னான, பொக்கிஷமான தருணம் என்கிறார்.
‘‘படப்பிடிப்பு இல்லைன்னா, முழு நேரமும் வீட்டில் இருக்கலாம் என்பதை தவிர, வேறு என்ன ஜாலி இருக்கப் போகிறது என நினைத்தேன். ஆனால், சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது என முழுநேர இல்லத்தரசியா இருப்பது எவ்ளோ பெரிய வேலை என்பதை இப்போ உணர்கிறேன். கடந்த 12 வருஷங்களில் இவ்ளோ நாட்களுக்கு நான் வீட்டில் இருந்ததே இல்லை. நான் பரபரப்பா படப்பிடிப்புக்கு ஓடிட்டிருக்கிறதால, என் அம்மா நிர்மலாதான் என் மகளுக்கும் அம்மாவா இருந்து கவனிச்சுக்கிறாங்க. இப்போ ஓய்வாக வீட்டில் நான், என் அம்மா, மகள் சாரா மூவரும் கூடி பேசுறதும், லூட்டி அடிக்கிறதும் ஆனந்தமா இருக்கு. இதை என் பொன்னான, பொக்கிஷமான தருணமாக கருதுகிறேன்.
ரெண்டு நாள் முன்பு தொலைக்காட்சியில் ‘படையப்பா’ படம் ஓடுச்சு. அதில், வீட்டின் தூணைப் பிடித்துக்கொண்டே சிவாஜி உயிர் விடுற காட்சியை என் மகள் பார்த்துட்டு, ‘‘இந்த தாத்தா இவ்ளோ சூப்பரா நடிக்கிறாரே’’ன்னு அசந்துபோய்ட்டா.
அடடா, சிவாஜியைக்கூட நாம அறிமுகப்படுத்தாம இருந்துட்டோமேன்னு வருத்தமாயிடிச்சு. இப்போ ‘திருவிளையாடல்’, ‘தில்லானா மோகனம்பாள்’னு ஒவ்வொரு சிவாஜி படமா பார்த்துட்டு இருக்கா.
வீட்டில் பெரியவங்களோடு நேரம் செலவழிப்பது மிகப்பெரிய ஆனந்தம்’’ என்கிறார் அர்ச்சனா.