தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று நடிகை ஹார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள்.
அவ்வப்போது தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறார்கள். இந்த வரிசையில் நேற்று (ஏப்ரல் 1) மாலை நடிகை ஹார்த்தியும் தனது ட்விட்டர் பதிவில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், "ஆச்சி மனோரமா மாதிரி, கோவை சரளா மாதிரி இப்போது பெண்களுக்குத் திரையுலகில் இடமுள்ளது. தயவுசெய்து அதை உபயோகியுங்கள். உங்களுடைய அடுத்த படம் என்ன? எப்படிப்பட்ட படம் எதிர்பார்க்கலாம் உங்ககிட்ட" என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஹார்த்தி, "தற்போது எந்த எழுத்தாளரும், இயக்குநரும் நகைச்சுவை நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒன்று இரட்டை அர்த்த காமெடி அல்லது கவர்ச்சி நோக்கில் பயன்படுத்துகிறார்கள். இவை எனக்குப் பிடிப்பதில்லை. நல்ல காலம் விரைவில் வரும் ப்ரோ" என்று தெரிவித்துள்ளார்.