கார்த்திக் நரேன் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியான 'மாஃபியா சேப்டர் 1' திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடித்திருந்த 'மாஃபியா' திரைப்படம் ஒரு போதை மருந்து கடத்தும் தொழில் செய்யும் டானுக்கும், போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கும் நடக்கும் மோதலைச் சொல்லும் படம். இதில் ஒரு காட்சியில் போலீஸ் விசாரணை செய்துள்ள விவரங்கள் ஒரு பலகையில் எழுதப்பட்டிருக்கும். இதில் அந்த போதை மருந்து கடத்தல் செய்பவனிடம் தொடர்பிலிருப்பவர்கள் என்று சிலரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.
ஆனால், உண்மையில் இது கனடாவில் ப்ரூஸ் மெக் ஆர்தர் என்ற கொலைகாரனால் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களே. அவன் கொன்ற எட்டுப் பேரில் ஐந்து பேரின் புகைப்படங்கள் இந்தக் காட்சியில், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புள்ளவர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
அப்படிக் கொலையானவர்களில் ஒருவரின் உறவினர், "ஏன் இவர்கள் எங்கள் குடும்பங்களுக்கு மீண்டும் நரகத்தைத் தருகிறார்கள். இது முற்றிலும் கண்ணியமற்ற செயல். தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு தமிழ்ப் படத்தில், மோசமாக மரணத்தைச் சந்தித்த (எங்களுக்குத் தெரிந்த) இருவருடன் இன்னும் மூன்று பேரை இப்படிச் சித்தரித்திருப்பது எவ்வளவு பொறுப்பற்ற செயல்" என்று கண்டித்துள்ளார்.
2019-ம் ஆண்டு, டொரண்டோ நகரில், ப்ரூஸ் மெக் ஆர்த்தர் என்பவன் 2010-லிருந்து, 2017 வரை தொடர் கொலைகள் செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்தப் புகைப்பட சர்ச்சை குறித்து அறிந்த அமேசான் நிறுவனம், "டொரண்டோ தொடர் கொலையில் கொலையானவர்களின் புகைப்படங்கள் படத்தில் இடம்பெற்றது குறித்து அறிந்தோம், வருந்தினோம். உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளது. ஆனால் இந்தச் செய்தியைப் பதிவேற்றும் நேரம் வரை ’மாஃபியா’ இன்னமும் ப்ரைம் தளத்தில் மேற்குறிப்பிட்ட காட்சியுடன் காணக் கிடக்கிறது.
இந்த விஷயம் குறித்து அறிந்த லைகா தரப்பு, சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு நிபந்தனையில்லா மன்னிப்புக் கேட்பதாகவும், இந்தியாவில் ஊரடங்கு முடிந்தவுடன் அந்தப் புகைப்படங்கள் படத்தில் மறைக்கப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும், படத்தில் பயன்படுத்த எந்த நோக்கமும் இல்லாமல், எதேச்சையாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களே அவை என்றும் விளக்கம் அளித்துள்ளது.