கரோனா வைரஸ் எந்தக் கடவுளுக்கும் சொந்தமானதல்ல என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 2000 பேரைக் கடந்துவிட்டது. மேலும், 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
இதனிடையே, மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் தப்லீக் ஜமாத் சார்பில் மத வழிபாடு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதை வைத்து முஸ்லிம்களால்தான் அதிகம் கரோனா வைரஸ் பரவுகிறது என்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்துகளை வெளியிடத் தொடங்கினார்கள்.
இது தொடர்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், ''கிருமிக்கு மதம் கிடையாது. கிருமி கடவுள் நம்பிக்கையற்றது. எந்தக் கடவுளுக்கும் சொந்தமானதல்ல. தனித்திருந்து ஒற்றுமையுடன் இந்தக் கிருமியை எதிர்ப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.