தமிழ் சினிமா

நிவாரணம் போதுமானதாக இல்லை: நடிகர் - நடிகைகளுக்கு பெப்சி அமைப்பு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

இதுவரை வந்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்றும், நடிகர்- நடிகைகள் இன்னும் நிவாரணத் தொகை அளிக்கலாம் என்றும் பெப்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சத்தால் தமிழ்த் திரையுலகம் கடும் பாதிப்புக்கு உள்ளானது. சின்னத்திரை, வெள்ளித்திரை என எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறாததால், தினக்கூலித் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். இவர்களுக்காக நிதியுதவி அளிக்குமாறு பெப்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

இந்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பலர் நிதியுதவியாகவும், பலர் அரிசி மூட்டைகளாகவும் வழங்கினார்கள். இதனிடையே தற்போது தங்களுக்கு வந்த நிதி மற்றும் அரிசி மூட்டைகள் எவ்வளவு என்பதை பெப்சி அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ தலைவர்‌ என்கிற முறையில்‌ ஒரு பணிவான வேண்டுகோள்‌.‌

தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனமும்‌ அதன்‌ உறுப்பினர்களும்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்படும்‌ சூழ்நிலையில்‌ கூட கரோனா வைரஸ்‌ பரவுதலைத் தடுக்கும்‌ விதமாக மத்திய, மாநில அரசுகளின்‌ அனைத்து நடவடிக்கைகளுக்கும்‌ ஒத்துழைப்பு வழங்கி உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடந்து வருகிறோம்‌ என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌.

'கரோனா வைரஸ்' பாதிப்பில்‌ நமது தேசமே ஊரடங்கி இருப்பதைப் போலவே தமிழ்த்‌ திரைப்படத் துறையும்‌ முடங்கிப்போய்‌ உள்ளது. தமிழ்த் திரைப்பட துறையில்‌ பணிபுரியும்‌ எங்கள்‌ தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள்‌, சம்மேளனத்தைச் சேர்ந்த 25,000 உறுப்பினர்களில்‌ 18,000 உறுப்பினர்கள்‌ தினக்கூலிகள்‌ ஆவார்கள்‌. இவர்கள்‌ மாநிலம்‌ முழுமையிலிருந்து திரைப்படத்துறையில்‌ பணிபுரிவதற்காக சென்னையில்‌ குடியேறியவர்கள்‌ ஆவார்கள்‌. இவர்கள்‌ யாருக்கும்‌ ரேஷன்‌ கார்டுகள்‌ இல்லை.

தினக்கூலி பெறும்‌ எங்கள்‌ உறுப்பினர்களில்‌ பெரும்பாலானோருக்கு ரேஷன்‌ கார்டுகளும்‌ இல்லாததால்‌ தங்கள்‌ அரசு அறிவித்த ரேஷன்‌ கடைகளில்‌ இலவசப் பொருட்களோ அல்லது குடும்ப அட்டைதாரர்களுக்கு தாங்கள்‌ அறிவித்த ரூ.1,000- உதவிப் பணமும்‌ பெற முடியாமல்‌ மிகவும்‌ சிரமமாக வாழ்வாதாரம்‌ முற்றிலும்‌ பாதிக்கப்பட்ட நிலையில்‌ பரிதாபகரமான நிலையில்‌ உள்ளார்கள்‌ என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌.

எனவே, எங்கள்‌ தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தில்‌ உறுப்பினர்களாக உள்ள கலைஞர்களுக்கு 'பெப்சி' மூலமாகவோ அல்லது திரைப்படத் தொழிலாளர்களின்‌ நலவாரியம்‌ மூலமாகவோ அல்லது நேரடியாகவோ உதவி வழங்கி அவர்களைப் பசிப்பிணியிலிருந்து காப்பாற்றும்படி தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

எங்கள்‌ வேண்டுகோளை ஏற்று இதுவரை நல்ல இதயம்‌ கொண்ட ரஜினிகாந்த்‌ ரூ.50 லட்சம், கமலஹாசன்‌ ரூ.10 லட்சம், சிவகுமார்‌, சூர்யா, கார்த்தி ஆகியோர்‌ ரூ.10 லட்சம், தனுஷ்‌ 15 லட்சம், விஜய்‌ சேதுபதி, சிவகார்த்திக்கேயன்‌, உதயநிதி ஸ்டாலின்‌ தலா ரூ.10 லட்சம், இயக்குநர்‌ ஷங்கர்‌ ரூ.10 லட்சம், தயாரிப்பாளர்‌ லலித்குமார்‌ ரூ.10 லட்சம் என மொத்தமாக ரூ.1,59,64,000 நிவாரணம் வழங்கியுள்ளனர்.

தயாரிப்பாளர்‌ தாணு 250 அரிசி மூட்டைகள், சூப்பர்‌ குட்‌ பிலிம்ஸ்‌ சார்பில்‌ 275 அரிசி மூட்டைகள்‌, கே.ஜே.ஆர்‌.ராஜேஷ்‌ 1,000 (10 கிலோ) அரிசி மூட்டைகள்‌, பார்த்திபன்‌ 250 அரிசி மூட்டைகள்‌, அருள்நிதி 200 அரிசி மூட்டைகள்‌ என மொத்தமாக 1,983 (25 kg) நிவாரணம்‌ வழங்கியுள்ளனர்‌. ஆனால்‌ 25,000 உறுப்பினர்கள்‌ கொண்ட நமது சம்மேளனத்திற்கு இந்த நிவாரணம்‌ 1 நபருக்கு 25 அரிசி மூட்டை, ரூ.500 உதவிப் பணம்‌ கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லை.

நமது தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தைப் போன்றே 25,000 தொழிலாளர்கள்‌ உள்ள இந்தி திரைப்பட உலகில்‌ சல்மான் கான்‌ என்ற ஒரு நடிகரே ஒவ்வொரு தொழிலாளிக்கும்‌ ரூ.5,000 உதவிப்பணம்‌ என்ற அளவில்‌ ரூ.13 கோடி நேரடியாகத் தொழிலாளர்களின்‌ வங்கிக் கணக்கில்‌ செலுத்தியுள்ளார்‌ என்ற செய்தியும்‌ பிரபாஸ்‌ 4 கோடி ரூபாய் கொடுத்தார், பவண்‌ கல்யாண்‌ 2 கோடி ரூபாய் கொடுத்தார்‌, நாகர்ஜூனா 1 கோடி ரூபாய் கொடுத்தார்‌ என்ற செய்திகளும்‌ நமது தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களின்‌ செவிக்கு வந்து சேருகின்றபோது அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையைக் கொடுக்கின்றது.

இன்று தமிழ்த் திரைப்படத் துறையில்‌ நல்ல நிலைமையில்‌ இருக்கின்ற நடிகர்கள்‌, நடிகையர்‌ சகோதர சகோதரிகளுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும்‌, மற்றும்‌ அதன்‌ உரிமையாளர்களுக்கும்‌ மற்றும்‌ திரைப்படத் துறையின்‌ மற்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நல்ல உள்ளம்‌ கொண்ட மனிதநேயப் பண்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்‌. இந்த இக்கட்டான முன்னுதாரணம்‌ இல்லாத சிரமமான நிலையில்‌ நமது திரைப்படத் தொழிலாளர்களைக் காப்பாற்ற நிதி அளிப்பீர்‌ என எங்களது திரைப்பட சகோதரர்களை மீண்டும்‌ கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறோம்‌”.

இவ்வாறு பெப்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT