தமிழ் சினிமா

இயக்குநராக நினைப்பவர்களுக்கு தியாகராஜன் குமாரராஜா அறிவுரை

செய்திப்பிரிவு

இயக்குநராக நினைப்பவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன என்ற கேள்விக்கு தியாகராஜன் குமாரராஜா பதிலளித்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வெளியாகி மார்ச் 29- ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுற்றது. இந்தப் படம் தொடர்பாக இப்போது வரை சமூகவலைதளத்தில் பாராட்டுகள் வந்துக் கொண்டிருக்கிறது.

மேலும், 'சூப்பர் டீலக்ஸ்' படம் வெளியாகி ஓராண்டு நிறைவையொட்டி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா. அதில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அந்தப் பேட்டியில் "இயக்குநராக நினைப்பவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?" என்ற கேள்விக்கு தியாகராஜன் குமாரராஜா கூறியிருப்பதாவது:

"பொதுவாக எனக்கு அறிவுரை சொல்வது பிடிக்காது. நான் ஒன்றைச் சொல்லி அதை அவர்கள் கேட்டால், அதற்குள் அடங்கிவிடுவார்கள். அவரவர் அவரவருக்கான வழியை அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்று வேண்டுமானால் சொல்கிறேன்.

மனதில் கதையை ஓட்டிக்கொண்டே இருப்பேன். இதை வேறு எப்படியெல்லாம் சொல்லலாம் என்று யோசிப்பேன். அதில் சிறந்த முறை எது என்று கண்டுபிடிப்பேன். ஒரு தருணம், ஒரு சூழலில் அந்த காட்சியில் வேறென்னவெல்லாம் நடக்கலாம், செய்யலாம் என்று யோசிப்பேன். ரசிகர்களுக்கு வேறென்னவெல்லாம் இதில் சொல்லலாம், அதை எவ்வளவு வித்தியாசமாகச் சொல்லலாம் என்று யோசிப்பேன்.

ஏற்கனவே செய்த விஷயங்களைப் பார்த்து அதை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம் என்று பார்ப்பேன். பெரும்பான்மையான நேரங்களில் அவர்கள் செய்ததே சிறப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் யோசிப்பதும் தவறில்லை. நீங்கள் நினைப்பது, ஏற்கனவே எடுக்கப்பட்டது என எல்லாவற்றையும் ஒரு படி மேலே உயர்த்த யோசிப்பதும் இன்னொரு வழி"

இவ்வாறு தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT