'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் நான்கு கதைகளில் எது உங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது என்ற கேள்விக்கு தியாகராஜன் குமாரராஜா பதிலளித்துள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட இந்தப் படம் வெளியாகி நாளையுடன் (மார்ச் 29) ஓராண்டு ஆகிறது. இந்தப் படம் தொடர்பாக இப்போது வரை யாரேனும் ஒருவர் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே ஓராண்டை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா. அதில் "நான்கு கதைகளில் எது உங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது?" என்ற கேள்விக்கு தியாகராஜன் குமாரராஜா கூறியிருப்பதாவது:
"எல்லா கதைகளுமே ஏதோ ஒரு வகையில் திருப்திகரமாக இருந்தது. விஜய் சேதுபதி கதையில் அவருடனும் அந்தச் சிறுவன் அஷ்வத்துடன் பணிபுரிவது சுவாரசியமாக இருந்தது. அந்தக் கதை எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற பயமும் இருந்தது. ஏனென்றால் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகர் உங்கள் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். படம் எப்படி வரும் என்று கவலை இல்லாமல் படப்பிடிப்புக்குப் போகலாம் என்றார்.
அவரது சம்மதத்தைத் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்ற அழுத்தம் ஒரு பக்கம், படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்று யாரும் அவரிடம் சொல்லிவிடக்கூடாது என்ற அழுத்தம் ஒரு பக்கம் என அந்தக் கதை எடுக்கும்போது ஒரு நிலையில் நான் இருந்தேன்.
ஃபஹத் கதையில் அவர் நடிப்பதைப் பார்க்கும் மகிழ்ச்சியே போதும். நாளையே ஃபஹத் என்னை அழைத்து, என்னிடம் ஒரு கதை இருக்கிறது, வந்து இயக்குங்கள் என்று சொன்னால், அதில் அவர் நடிக்கவுள்ளார் என்றால், நான் யோசிக்காமல் சம்மதித்துவிடுவேன். ஏனென்றால் இந்த மனிதர் நடிப்பதைப் பார்ப்பதே அலாதியானது. மிகவும் நுட்பமான, அழகான நடிப்பு.
சமந்தாவின் நடிப்பும் என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் இதுவரை அவரது பல படங்களைப் பார்த்ததில்லை. பாடல்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதனால் எதுவும் தெரியாமல் தான் அவரை நடிக்க வைத்தேன். அந்த நான்கு இளைஞர்கள் கதையைப் பொருத்தவரை அவர்கள் அனைவருமே திறமைசாலிகள். எனவே ஒரு இயக்குநராக எனக்கு இவர்கள் கண்டிப்பாக நன்றாக நடிப்பார்கள் என்று தெரியும்"
இவ்வாறு தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்