நடிப்பதில் நல்ல அனுபவம் கிடைத்து வருவதாக இயக்குநர் கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, தர்ஷன், நிரஞ்சனா அகத்தியன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இந்தப் படத்தின் கவுதம் மேனனின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இயக்குநராக மட்டுமன்றி தற்போது நடிகராகவும் பல்வேறு படங்களில் கவுதம் மேனன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனது நடிப்புப் பயணம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகரானது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் கவுதம் மேனன். அந்தப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்!
இயக்குநர்கள் அடிப்படையில் வெறுப்பில் இருக்கும் நடிகர்களா?
ஹா ஹா.. நல்ல ஆரம்ப கேள்வி. நான் இயக்கிய படங்கள் எதிலுமே நான் இதுவரை நடித்துக் காட்டியதில்லை. சில கதாபாத்திரங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறேன்.
மாதவன், அஜித், சூர்யா, சிம்பு, கமல் என எவரது நடிப்பும் என்னை வெறுப்பேற்றியதில்லை. அவர்களுக்கு ஏற்றவாறு நாம் பணிபுரிய வேண்டும். விக்ரம் நாம் பேசும்போது கேட்காதது போல இருக்கும். ஆனால் அது திமிர் அல்ல. நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்று எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு என்ன வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று அவர் பாணியில் அவர் சொல்கிறார். முதல் டேக் நீங்கள் மனதில் நினைத்ததை விட வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அதை அவரிடம் சொல்லலாம்.
சமீபத்தில் அன்வர் ரஷீத், ஃபஹத் ஃபாசில் போன்றவர்களைச் சந்தித்து வருகிறேன். அவர்கள் தான் நான் நடிப்பது பற்றி யோசிக்கச் சொன்னார்கள். அதுவும் ஒரு களம். சற்று தலையை நீட்டி எட்டிப் பார்க்கிறேன். அந்த வாய்ப்பை நான் தவறவிடவில்லை. எனக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ஒரு மோசமான அனுபவம் இருந்தது. அந்தப் படத்திலிருந்து வெளியேறி விட்டேன்.
இவ்வளவு திறமையான நடிகர்கள் இருக்கும் போது நான் எதற்கு என்று கேள்வி வந்திருக்குமே?
என்னை அணுகியவர்கள் அனைவரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு முன்பாகவே எனக்கு முழு நீளக் கதாபாத்திரங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நான் மறுத்துவிட்டேன். (ட்ரான்ஸ் இயக்குநர்) அன்வரிடமும் கேட்டேன். எனது பேட்டிகளை நான் கையாளும் விதம், பேசும் விதம் பிடித்திருக்கிறது என்றார். சிலர் என்னிடம் எதிர்மறையான கதாபாத்திரத்தைப் பார்க்கிறார்கள்.