தமிழ் சினிமா

அன்பைப் பரப்புங்கள், களங்கங்களை அல்ல: த்ரிஷா

செய்திப்பிரிவு

கரோனா முன்னெச்சரிக்கையாக வீட்டிற்குள் இருக்கும் இந்த சூழலில் அன்பை பரப்புமாறும், களங்கங்களை அல்ல என்றும் த்ரிஷா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுக்கவே 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். மேலும், வெளியே சென்ற மக்களையும் காவல்துறையினர் வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தி அனுப்பிவைத்து வருகிறார்கள்.

பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் இருக்க திரையுலக பிரபலங்களும் அறிவுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை தங்களது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"உங்கள் ஒவ்வொருவரைப் போலவே நானும் கரோனா கிருமிக்கு எதிரான இந்திய அரசின் முயற்சியை ஆதரிக்கும் வண்ணம் அடுத்த 21 நாட்கள் வீட்டிலேயே இருக்கப் போகிறேன். இந்த கிருமி யாரையும் தாக்கும். இது ஒரு குறிப்பிட்ட ஜனத்தொகை, இனம், மாநிலம் என்று பார்த்துப் பாதிப்பதில்லை.

நீங்கள் என்ன வயது, பார்க்க எப்படி இருக்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், என்ன மொழி பேசுகிறீர்கள் என்பதெல்லாம் இந்த கிருமிக்கு முக்கியமல்ல. இது போன்ற நோய்த் தொற்று நேரங்களையும், அன்பைப் பரப்புவதும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பதும் முக்கியம். வீட்டில் இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் அதனால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும் என்பதே எனக்கு (வீட்டில் இருக்க) ஊக்கத்தைத் தருகிறது. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். அன்பைப் பரப்புங்கள், களங்கங்களை அல்ல. நன்றி"

இவ்வாறு த்ரிஷா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT