தமிழ் சினிமா

ரஜினியைக் காட்டி ஸ்ரீகாந்த்; ஸ்ரீகாந்தைக் காட்டி ரஜினி; விசுவின் கதை வசனத்தில் ‘சதுரங்கம்’ 

செய்திப்பிரிவு

விசுவின் கதை வசனத்தில், துரை இயக்கிய படம் ‘சதுரங்கம்’. ரஜினியும் ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர்.


இந்தப் படத்தின் கதையைப் பார்ப்போம்.


ரஜினியும் ஸ்ரீகாந்தும் சகோதரர்கள். ரஜினி அண்ணன். ஸ்ரீகாந்த் தம்பி. அம்மா பண்டரிபாய். அண்ணன் அரசு வேலை. தம்பி கல்லூரி மாணவன். அண்ணன் ரஜினி பயந்த சுபாவம். தம்பி ஸ்ரீகாந்தோ பொறுப்பற்றுத் திரிபவர். அடாவடி செய்பவர். இதனால், வீட்டில் எப்போதும் நிம்மதியில்லை.
அம்மாவுக்கு பணிந்த ரஜினி, பிரமீளாவைக் கல்யாணம் செய்துகொள்வார். தம்பி ஸ்ரீகாந்தோ, தன் தடாலடி நடவடிக்கையால், ஜெயசித்ராவை, படிக்கும்போதே திருமணம் செய்துகொள்ள நேரிடும்.


பயந்து நடுங்கும் ரஜினி, லஞ்சம் வாங்க பயப்படுவார். வி.கோபாலகிருஷ்ணன் ரஜினியை வழிக்குக் கொண்டு வர, பிரமீளாவிடம் வலை விரிப்பார். ரஜினிக்கு பிரமீளா ‘கீ’ கொடுத்து இம்சிக்க, ஒருகட்டத்தில் லஞ்சம் வாங்கத் தொடங்குவார் ரஜினி. வீட்டுக்கு ஆடம்பரப் பொருளெல்லாம் குவியும்.
இதேசமயத்தில், படிப்பில் கோட்டைவிட்ட ஸ்ரீகாந்த், கொஞ்சம் கொஞ்சமாக பொறுப்புடன் நடந்துகொள்வார். கஷ்டப்பட்டு, தானே ஒரு கம்பெனியைத் தொடங்குவார். ரெண்டாவது மகன் ஸ்ரீகாந்த் உருப்படமாட்டான் என வருந்திய அம்மா பண்டரிபாய், நல்லவனாக இருந்த மூத்தமகன் ரஜினி, லஞ்சம் வாங்குகிறான் எனத் தெரிந்து நொந்துபோவார்.


இறுதியில், அம்மா இறந்துபோக, ரஜினி கைது செய்யப்பட... முடிவுறும் திரைப்படம். இந்த ‘சதுரங்கம்’ ஆட்டம் எழுபதுகளில் நன்றாகப் பேசப்பட்டது. நடிகரும் இயக்குநருமான விசு கதை, வசனம் எழுதினார். வி.குமார் இசையமைக்க, பின்னாளில், ‘பசி’ படத்தை இயக்கி, ‘பசி’ துரை என்று பெயரெடுத்த துரை, இயக்கினார். ‘மதனோத்ஸவம் ரதியோடுதான்’ பாட்டு செம ஹிட்டானது.


இந்தப் படத்தில் ஜெயசித்ராவின் கேரக்டர் பெயர் உமா என்பது கூடுதல் தகவல். இன்னொரு தகவல்... விசுவின் ‘சதுரங்கம்’ படம் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படமாக எடுக்கப்பட்டது. இந்த முறை, ‘சதுரங்கம்’ படத்தை விட, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தை விசுவே இயக்கினார். அது... ‘திருமதி ஒரு வெகுமதி’.


‘சதுரங்கம்’ படம் வெளியானது 1978ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி. படத்தின் டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்று குழம்பித் தவித்தார்கள் போல! அதனால், டைட்டில் போடும்போது, ஸ்ரீகாந்த் புகைப்படம் இருக்கும்; ரஜினிகாந்த் என்று டைட்டில் வரும். அடுத்து, ரஜினிகாந்த் புகைப்படம் இருக்கும். ஸ்ரீகாந்த் என்ற பெயர் டைட்டிலில் வரும்.


இன்னொரு விஷயம்... ரஜினியும் ஸ்ரீகாந்தும் நடித்த படம்... ரஜினியின் வாழ்வில் மிக முக்கியமான படம்... ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை போஸ்டரிலும் பேனரிலும் கொடுத்த படம்... கலைஞானத்தின் ‘பைரவி’. அதே 78ம் ஆண்டு, ஜூன் மாதம் 2ம் தேதியே ’பைரவி’ வெளியானது. இந்தப் படத்தின் டைட்டில் கார்டில், ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த், வி.கே.ராமசாமி, சுருளிராஜன், சுதிர் (அறிமுகம்) என்று எல்லார் பெயரும் ஒரே சமயத்தில் வரும் என்பது சுவாரஸ்யமான ஒன்றுதானே!

SCROLL FOR NEXT