தமிழ் சினிமா

இப்போ கெஞ்சுவாங்க மக்களே; அப்புறம் அடி பிரிப்பாங்க: சாந்தனு

செய்திப்பிரிவு

இப்போ கெஞ்சுவாங்க மக்களே; அப்புறம் அடி பிரிப்பாங்க என்று சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இன்று (மார்ச் 25) தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது "விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு" என்று பேசினார்.

முதல்வர், அமைச்சர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவரும் வேண்டுகோள் விடுத்தாலும், பலர் பைக்குகளில் இன்று காலை சென்னையை வலம் வந்தனர். அவ்வாறு எச்சரிக்கையை மீறி வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளைக் கையெடுத்துக் கும்பிட்டு ரஷீத் என்கிற போக்குவரத்து உதவி ஆய்வாளர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் . இதைப் பலரும் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோவுக்கு இன்று காலை முதலே திரையுலகப் பிரபலங்கள் மட்டுமன்றி சமூக பயனீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த வீடியோ தொடர்பாகவும், வெளியே சென்றவர்களைச் சாடியும் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"மிகச்சிறந்த முட்டாள்கள் என்பதை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு போலீஸ்காரர் நம்மிடம் அழுவதைப் பார்க்க மிகவும் சோகமாக இருக்கிறது. மற்ற மாநில போலீஸைப் போல அவரும் நடந்திருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். எவ்ளோ சொன்னாலும் திருந்தமாட்டோம். இப்போ கெஞ்சுவாங்க மக்களே. அப்புறம் அடி பிரிப்பாங்க.. அப்போது புகார் சொல்லக்கூடாது".

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT