ஜீப்பின் டயரை மாற்ற 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சியில் ரஜினிக்குக் கற்றுக் கொடுத்தார் பியர் க்ரில்ஸ்.
டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து வனப்பகுதிகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் தோன்றுவது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சி நேற்று (மார்ச் 23) இரவு டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஒரு பாலத்தின் கம்பியைப் பிடித்து அதன் முனையில் கயிறு கட்டி நடந்து அந்தப் பக்கம் கடந்துபோக வேண்டியிருந்தது. பியர் க்ரில்ஸ் முன்னால் செல்ல, ரஜினிகாந்த் அவரைத் தொடர்ந்து பின்னால் சென்றார். உச்சி வெயிலில் இருவரும் கயிறு கட்டிக்கொண்டு ஆபத்தான அந்தப் பாலத்தைக் கடந்தனர்.
அதைத் தாண்டி வந்ததும் ரஜினிகாந்திடம் உற்சாகம் காணப்பட்டது. கடந்து வந்ததும் ரஜினிகாந்த், "நான் இவ்வளவு வருடங்கள் பல சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் இது ஆண்டவா. கடினம். சண்டைக் காட்சிகளில் கீழே குதிக்கும்போது மெத்தை போட்டிருப்பார்கள். அதெல்லாம் சினிமாவில். ஆனால் இங்கு ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் அவ்வளவுதான். ஒரு சின்ன கயிற்றின் உதவியுடன்தான் தாண்டி வந்திருக்கிறோம். மேலும் அது இரும்புப் பாலம். வெயிலில் கடும் சூட்டோடு இருந்தது. அதை நீண்ட நேரம் பிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஆனால் வெற்றிகரமாகத் தாண்டிவிட்டேன்" என்று உற்சாகமாக கேமராவைப் பார்த்துப் பேசினார்.
பின்பு, ஒரு கட்டத்தில் பியர் க்ரில்ஸும் ரஜினிகாந்த்தும் சென்று கொண்டிருந்த ஜீப்பின் சக்கரம் பஞ்சர் ஆனது. சக்கரத்தை மாற்ற இருவரும் கீழே இறங்கினார். எப்படி டயர் மாற்றுவது என்று ரஜினிக்கு பியர் க்ரில்ஸ் கற்றுத் தந்தார். "வாழ்க்கையிலேயே முதல் முறையாக இப்போதுதான் இந்த வேலையைச் செய்கிறேன்" என்று சொல்லி ஆர்வமாகச் சக்கரத்தை மாற்ற உதவினார் ரஜினிகாந்த். பின்னர் பியர் க்ரில்ஸ் வந்து அந்தப் பணியைத் தொடர்ந்தார்.
அப்போது பியர் க்ரில்ஸின் கண்ணாடியை எடுத்துக் கொடுத்தார் ரஜினி. கண்ணாடியை வாங்கிய பியர் க்ரில்ஸ், 'நீங்கள் கண்ணாடியை ஸ்டைலாக அணிவீர்களாமே. அது எப்படி' என்று கேட்க அதற்கு ரஜினி அவரது திரைப்படங்களில் செய்வதைப் போலத் தனது பாணியில் தன் கண்ணாடியை அணிந்தார்.
அவரைப் போலவே பியர் க்ரில்ஸும் முயற்சிக்க அவரால் முடியவில்லை. பின் ரஜினிகாந்த், 'இது எளிதான விஷயம் தான்' என்று சொல்லி நிதானமாகச் சொல்லிக் கொடுத்தார். ஆனால் அது நகைச்சுவையாகவே முடிந்தது. தான் செய்ததை நினைத்துச் சிரித்த பியர் க்ரில்ஸ், 'இதனால் தான் இவர் ஒரு சினிமா நட்சத்திரம் நான் இங்கு டயர் மாற்றுபவன்' என்று கேமராவைப் பார்த்து நகைச்சுவையாகச் சொன்னார்.