விசுவின் இழப்பு ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என்று நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்கு கதாசிரியராக பணிபுரிந்த விசு நேற்று (மார்ச் 22) மாலை காலமானார். அவருக்கு வயது 74. அவரது இறுதிச்சடங்கு இன்று (மார்ச் 23) மதியம் முடிவுற்றது. விசுவின் மறைவு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
விசுவின் மறைவு குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆளுமை விசு சாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் தன்னுடைய கிளாசிக் படங்கள்/ நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றுக்காக என்றென்றும் நினைவு கூறப்படுவார். ஒரு சிறந்த நிர்வாகியாகவும், வழிகாட்டியாகவும் அவருடைய இழப்பு ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் சார்"
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.