இங்கிலாந்தில் முதல் அன்னையர் தினத்தை முன்னிட்டு, நடிகை ஏமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் நடிகையான ஏமி ஜாக்சன் 'மதராசபட்டினம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'ஐ', 'தங்கமகன்', 'தெறி', '2.0' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பனாயிடூ என்ற தொழிலதிபரைக் காதலித்து வந்தார். அப்போது கர்ப்பமானார். இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
தற்போது இங்கிலாந்து நாட்டில் இருக்கிறார் ஏமி ஜாக்சன். அங்கு மார்ச் 22-ம் தேதி அம்மாக்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மாவாகியுள்ள ஏமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
”மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்ற உணர்வுடன் எனது முதல் அன்னையர் தினத்தில் கண் விழிக்கிறேன். எனது சின்னக் குழந்தை ஆண்ட்ரியாஸ்ஸுக்கு முன்னால் என் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது கூட எனக்கு நினைவில் இல்லை. எல்லாம் அர்த்தமற்று இருந்தது.
அந்த தேவன் போன்ற முகத்தையும், குட்டிச் சிரிப்பையும் ஒவ்வொரு நாளும் பார்ப்பது, அவனுக்குச் சிறந்த முன்மாதிரியாக, பாதுகாவலராக, நம்பிக்கைக்குரியவனாக, தோழியாக அன்னையாக இருக்க எனக்குக் கிடைக்கும் ஊக்கம். எனது அழகான அம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் தான் எனக்கு உண்மையான ஊக்கம். நிபந்தனையற்ற அன்பை எனக்குத் தந்ததற்கு நன்றி.
நீங்கள் அபரிமிதமான அன்பும், வலிமையும் கொண்ட பெண்மணி. தாய்மை என்ற இந்த அற்புதமான பயணத்துக்கான பாதையை நீங்கள் எனக்காக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு உங்களை விரும்புகிறேன்”
இவ்வாறு ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பனாயிடூ - ஏமி ஜாக்சன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.