தமிழ் சினிமா

இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது: 'ஆடை' இயக்குநர் காட்டம்

செய்திப்பிரிவு

இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது என்று 'ஆடை' இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பதிவில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் நேற்று (மார்ச் 22) சுய ஊரடங்கிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது தொடர்பான வேண்டுகோள் விடுக்கும் போது, அன்றைய தினம் மாலை 5 மணிக்கு 5 நிமிடம் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக கை தட்டி, மணியோசை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிரதமர் மோடி.

ஆனால், இதை புரிந்துக் கொள்ளாமல் பலரும் குடியிருப்பு மாடிகளில் ஒன்று கூடியும், ரோடுகளில் கைதட்டிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் சென்றார்கள். இந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகின. இதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக 'மேயாத மான்' மற்றும் 'ஆடை' படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பதிவில் "போராட வர சொன்னால் வீட்டில் இருந்துகொண்டும், வீட்டில் இருக்கச் சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியைச் சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT