கரோனா வைரஸ் தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பயப்பட வேண்டிய விஷயத்துக்குப் பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊடரங்கு கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
பல்வேறு பிரபலங்களும் மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:
“கரோனா வைரஸ். நம்ம நினைத்ததை விட ரொம்ப வேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது. நம்ம பரப்ப வேண்டிய ஒரே விஷயம் விழிப்புணர்வு மட்டுமே. வெள்ளம், புயல் ஜல்லிக்கட்டு என்று ரோட்டில் இறங்கிப் போராடிய நாம் இப்போது வீட்டிற்குள் இருந்தே போராட வேண்டும்.
சீனாவை விட இத்தாலியில் அதிகமான உயிரிழப்பு நடந்ததற்குக் காரணம், அறியாமையில் வெளியில் சுற்றிய அப்பாவி மக்கள்தான். இந்தியா இன்னொரு இத்தாலியாகி விடக்கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு மீட்டராவது எனக் கூறுகிறார்கள். வெளியே போய்விட்டு வந்தால், கை - கால்களைக் கழுவச் சொல்கிறார்கள். கழுவாத கையால் முகத்தைத் தொட வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
அனைத்து இருமலும், காய்ச்சலும் கரோனா கிடையாது. இருந்தாலும் உங்களை 5 - 6 நாட்கள் பார்த்துக் கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டு, அதற்கு மேல் இருந்தால் மருத்துவர்களை அணுகச் சொல்கிறார்கள். பஸ், ரயில் எனப் பயணிப்பவர்கள், அலுவலகத்திற்குச் செல்பவர்கள் இறை வழிபாட்டுக்குச் செல்பவர்கள், ஏன் மருத்துவமனைக்குக் கூட ரொம்ப அத்தியாவசியம் என்றால் மட்டுமே செல்லுங்கள். இல்லையென்றால் தயவுசெய்து வெளியே போக வேண்டாம். கூட்டம் கூட்டமாகப் போவதற்கு இது விடுமுறைக் காலமல்ல. பாதுகாப்பாக குடும்பத்துடன் இருக்க வேண்டிய நேரம்.
10 நாளில் 150 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரங்களில் 250 ஏறியிருக்கிறது. பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஏறிக் கொண்டே இருப்பதால் மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஒருத்தர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், ரயிலிலோ, பொது நிகழ்ச்சிக்கோ போனால் அவரைச் சுற்றி இருக்கும் அத்தனை பேருமே பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு தவறை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நமக்காகத் தான் மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும், துப்பரவு தூய்மைப் பணியாளர்களும் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து நமக்காக வெளியே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்காக வெளியே இருக்கிறார்கள், அவர்களுக்காக நாம் வீட்டில் சுகாதாரமாக இருக்கலாமே. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. பயப்பட வேண்டிய விஷயத்துக்குப் பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம் என்று சொல்வார்கள்.
இந்த விழிப்புணர்வை அனைவருக்கும் பரப்புவோம். குறிப்பாகக் குழந்தைகளையும், பெரியவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். கரோனா வைரஸை தடுக்க அடுத்த 2 வாரம் ரொம்ப முக்கியமானது என்று சொல்கிறார்கள். எச்சரிக்கையுடன் இருப்போம், வரும்முன் காப்போம்”.
இவ்வாறு சூர்யா பேசியுள்ளார்.