தமிழ் சினிமா

அனிருத்துடன் ஒப்பிட்டு உருவ கேலி: பாவனா சாடல்

செய்திப்பிரிவு

அனிருத்துடன் ஒப்பிட்டு உருவ கேலி செய்து வெளியான மீம்ஸுக்கு பாவனா தனது ட்விட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர் பாவனா. முதலில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். இப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் வர்ணனையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற 'மாஸ்டர்' படத்தின் இசை வெளியீட்டையும் ஆர்.ஜே.விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். சில காலங்களாக இவரையும் அனிருத்தையும் ஒப்பிட்டு உருவ கேலி செய்து மீம்ஸ் ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. அதாவது அனிருத்துக்குப் பெண் வேடமிட்டால் அவர் பாவனா போல் இருப்பார் என்று அந்த மீம் இருந்தது.

இந்த மீம் தொடர்பாக பாவனா தனது ட்விட்டர் பதிவில், "நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்த ஒரு முகம் உள்ளது. நான் எப்படி இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை. அனிருத்தும் இதேபோல உணர்வார் என்று உறுதியாக நம்புகிறேன்.

நகைச்சுவையாக நாம் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அது ரீட்வீட்களையும் சில சிரிப்புகளையும் பெறும் ஒரு ஆயுதமாகி விடக் கூடாது. நான் எதையும் எளிதாக எடுத்துக் கொள்பவள்தான். ஆனால், எளிய இலக்கு கிடையாது. நகைச்சுவை யாரையும் காயப்படுத்தக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார் பாவனா.

SCROLL FOR NEXT