கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பான இந்த நாளை மறக்காமல் இருக்க மரக்கன்று நடுவோம் என்று இயக்குநர் சுசீந்திரன் யோசனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊடரங்கு கடைப்பிடிக்கப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். அதே போல் குழந்தைகளின் திறமையை வீடியோ எடுத்து அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் இயக்குநர் சேரன். அதனைத் தொடர்ந்து மரக்கன்று நடக்கூறி இயக்குநர் சுசீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சுசீந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், “நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 144- இந்த வார்த்தையை நம்ம வாழ்க்கையில் சந்திப்போம்னு நாம் யாருமே எதிர்பார்த்து இருக்கமாட்டோம். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நாளை வாழ்நாள் முழுவதும் நாம் ஞாபகம் வைக்கும் விதமாகவும் அதே நேரத்தில் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அல்லது எதிர்ப்பு ஆற்றல் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் வாழ்நாள் முழுவதும் உணரும் விதமாகவும் ஒரு மரக்கன்றை நடுவோம். இந்த மரக்கன்று நம் வாழ்நாள் முழுவதும் இந்த நாளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்”.
இவ்வாறு சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.