தமிழ் சினிமா

உடல் எதிர்ப்பு சக்தியால் கரோனாவைக் கொன்று விரட்டுவோம்: இயக்குநர் பாரதிராஜா

செய்திப்பிரிவு

உடல் எதிர்ப்பு சக்தியால் கரோனாவைக் கொன்று விரட்டுவோம் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 326 பேரைப் பாதித்துள்ளது. பலரும் தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர். இதனிடையே இன்று (மார்ச் 22) மக்கள் ஊரடங்கிற்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனால் இந்தியாவில் பேருந்துகள் எதுவுமே ஓடவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.

மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைக்குமாறும் இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”என் இனிய தமிழ் மக்களே! இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் நடக்கும் போராட்ட யுத்தத்தில், பல சூழ்நிலை காலகட்டங்களில் மிகக் கொடிய அபாய தொற்று நோய்களைக் கண்டது நம் பாரத பூமி.

நிபா வைரஸ், சிக்கன்குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், ப்ளேக் நோய், ஆந்த்ராக்ஸ், HIV, எனப் பல ஒட்டுண்ணிகள் நம் தேசத்தை அச்சுறுத்திய நாம் அறிந்தோம். கடந்து வந்தோம். அதுபோலவே வளரும் விஞ்ஞானத்தில் கரோனா போன்ற வைரஸ்கள் ஆச்சரியமானவை.

தனிமனித சுகாதாரமே தேச நலன் என நம் பாரத பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவிற்கும் விழிப்புணர்வு ஏற்பாட்டிற்கும் கை கொடுப்போம். நம் தமிழக அரசின் முயற்சியின் வேகங்களும் பாராட்டுக்குரியவை.

இன்று ஓர் நாள் சூரிய ஒளி படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எதிர்ப்பு சக்தியால், பல போராட்டங்களை வென்றவர்கள் நாம். உடல் எதிர்ப்பு சக்தியால் கரோனாவைக் கொன்று விரட்டுவோம். சுகாதாரம் ஒன்றே தற்போதைய மருந்து!”

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT