தமிழ் சினிமா

லிங்காவில் இங்கிலாந்து நடிகை லாரென் ஜே இர்வின்

ஸ்கிரீனன்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'லிங்கா' படத்தில் இங்கிலாந்து நடிகை லாரென் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

'கோச்சடையான்' படம் வெளியாகும் முன்பே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க தொடங்கப்பட்ட படம் 'லிங்கா'. இப்படத்தில் ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார்.

'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு காட்சிகளில் ரஜினி மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் வெளிநாட்டு நடிகை ஒருவர் இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் வெளியானது. யார் அந்த நடிகை என்று எதிர்பார்ப்பு உண்டானது.

இங்கிலாந்தில் மேடை நாடகங்களில் நடித்த லாரென் ஜே இர்வின், 'லிங்கா' படத்தின் மூலம் இந்திய திரையுலகிற்கு அறிமுகமாகிறார். அவர் மேடை நாடகங்கள் மட்டுமன்றி சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.

'லிங்கா' படத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன் நடப்பது போன்று சில காட்சிகள் இருக்கிறதாம். அக்காட்சிகளில் நடிப்பதற்காக லாரென் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ரஜினியுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மைசூர் அரண்மனையில் கடந்த இரண்டு வாரங்களாக இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

தனது காட்சிகளை முடித்து விட்டு சென்றிருக்கும் லாரென், இப்படம் வெளியான பிறகு இந்திய திரையுலகில் இருந்து தனக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்நோக்கி இருக்கிறார்.

SCROLL FOR NEXT