அநியாயமா கொன்னுட்டாங்க படத்தை என்று 'ராஜாவுக்கு செக்' படம் தொடர்பாக இயக்குநர் சேரன் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், இர்ஃபான், சிருஷ்டி டாங்கே, சாராயூ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராஜாவுக்கு செக்'. ஜனவரி 24-ம் தேதி வெளியான இந்தப் படத்தை சோமன் மற்றும் தாமஸ் இணைந்து தயாரித்திருந்தார்கள். எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், சிலர் இந்தப் படத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது 'ராஜாவுக்கு செக்' படத்தைப் பார்த்துவிட்டு "ப்ரைமில் 'ராஜாவுக்கு செக்' படத்தைப் பார்த்தேன். நல்ல த்ரில்லர் படம்" என்று இயக்குநர் சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுத் தெரிவித்தார்.
அவருக்குப் பதிலளிக்கும் வகையில் இயக்குநர் சேரன், "அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை. எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு 'தேவர் மகன்'ல டயலாக் இருக்கும். அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க. வயிறு எரியுதும்மா. சும்மா விடாது எங்களோட உழைப்பு" என்று தெரிவித்துள்ளார்.