தமிழ் சினிமா

மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி: பின்னணியில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்', அவரது நடிப்பில் உருவாகும் 64-வது படமாகும். இசை வெளியீட்டு விழா முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சம் முடிந்தவுடன் ட்ரெய்லர் வெளியீட்டுடன் படத்தின் வெளியீடும் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்பதில் நீண்ட நாட்களாகக் குழப்பங்கள் நீடித்து வந்தது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ப்ரதீப் ரங்கநாதன், பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் விஜய்யைச் சந்தித்து கதைகள் கூறினார்கள். இவர்கள் கூறிய கதைகளை விட சுதா கொங்கரா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, ஜூனில் படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று தெரிவித்தார் விஜய்.

ஆனால், நவம்பரில்தான் படப்பிடிப்புக்கே செல்ல முடியும். படத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு அவ்வளவு நாட்கள் தேவை என்று சுதா கொங்கரா கூறிவிட்டார். இதனால், இவரது படம் 66-வது படமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த இயக்குநர்கள் பட்டியலில் இறுதியாக இணைந்தவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ்.

அல்லு அர்ஜுனிடம் தற்போது தேதிகள் இல்லை என்பதாலும், முந்தைய 2 படங்கள் சரியாக அமையாததாலும் ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்போதுதான் 'துப்பாக்கி', 'கத்தி' என்ற இரண்டு பிரம்மாண்ட வெற்றிகளைக் கொடுத்துள்ளேன். ஆகையால் மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுப்பேன் என்று விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால், 'சர்கார்' கூட்டணியாச்சே என்று பலரும் கருதுவார்களே எனப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், இந்த முறை எவ்வித சர்ச்சையும் இல்லாமல், முழுக்க கமர்ஷியல் பாணியில் ஒரு படம் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதனைத் தொடர்ந்து படத்தின் பட்ஜெட், எத்தனை நாட்கள் படப்பிடிப்பு உள்ளிட்டவையும் பேசி முடிவு செய்துள்ளனர்.

இதனால் சன் பிக்சர்ஸ் - விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி என்ற அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT