'மாநாடு' படம் தொடர்பாக எழுந்த கிண்டல் பதிவுகளுக்கு, பதிலடி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்கள். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
சில பிரச்சினைகளுக்குப் பிறகே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், இது தொடர்பாக கிண்டல் பதிவுகளும், மீம்ஸ்களும் இணையத்தில் உலவத் தொடங்கின.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில், "கிரேன் விழுந்து எங்கள் சகோதரர்களை இழந்ததையே எங்களால் இன்னமும் மறக்க இயலவில்லை. இந்தக் கரோனாவுக்கா இடம் கொடுப்போம்? இதற்காக ரொம்பவே வருந்தியவரும், உழைப்பாளிகளின் பாதுகாப்பு முக்கியம் எனக் கருதியவரும் எங்கள் எஸ்.டி.ஆர்தான். மீண்டும் கெத்தா தொடங்கும் எங்கள் "மாநாடு" " என்று தெரிவித்துள்ளார். இதனுடன் மீம்ஸ் ஒன்றையும் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.