'அரண்மனை கிளி' சீரியலில் இருந்து நீலிமா விலகியுள்ளார். இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர் 'அரண்மனை கிளி'. 2018-ம் ஆண்டிலிருந்து இந்தத் தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மோனிஷா அர்ஷக், சூர்யா தர்ஷன், பிரகதி, நீலிமா ராணி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதனிடையே, திடீரென்று 'அரண்மனை கிளி' தொடரிலிருந்து நீலிமா ராணி விலகியிருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இது தொடர்பாக நீலிமா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறுகையில், ''கேமராவின் முன்னால் நிற்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருக்கிறேன். என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே நான் நடித்து வருகிறேன். தற்போது வாழ்க்கை சில பல மாற்றங்களைக் கோருகிறது. நான் அதை ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் வரவேற்கிறேன். போய் வா துர்கா, நான் உன்னை மிஸ் செய்வேன். ரசிகர்களோ நண்பர்களோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், நீங்கள்தான் எனது பலம். எனக்காகப் பிரார்த்தனை செய்து என்னை வாழ்த்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நீலிமா கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக யார் நடிக்கவுள்ளார் என்பதை இன்னும் 'அரண்மனை கிளி' குழு தெரிவிக்கவில்லை.