கரோனா வைரஸ் தொடர்பாகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நடிகரும், இயக்குநருமான லாரன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களிடையே கரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால், தமிழக எல்லையோரம் இருக்கும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பரிசோதனைகள் செய்த பிறகே தமிழக எல்லைக்குள் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கரோனா வைரஸ் தொடர்பாகத் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு நடிகரும், இயக்குநருமான லாரன்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
''இன்று உலகையே பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் 'கரோனா வைரஸ்’ தமிழகத்தில் பரவி விடாமல் இருக்க, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதமாகவும் மிகத் தீவிரமாகவும் எடுத்து, கரோனா வைரஸைக் கட்டுக்குள் வைப்பதற்காக சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் மனப்பூர்வமான பாராட்டுகள்.
பொதுவாக ஒரு விஷயத்தில் அரசு சரியாக நடவடிக்கை எடுக்காதபொழுது, எப்படித் தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறதோ, அதேபோல ஒரு விஷயத்தில் அரசு சரியாகச் செயல்படுகிறபோது பாராட்ட வேண்டியதும் நமது கடமை. தமிழக அரசைப் பாராட்டுகிற அதே சமயம், பொதுமக்களாகிய நாமும் அரசு எடுத்துக் கூறி வருகிற, சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைக் கவனத்துடன் கடைப்பிடிப்போம். உயிர் நலன் காப்போம்!''.
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.