கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் முடிவுகளால், 'கோப்ரா' படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது.
சீனா, ரஷ்யா, அமெரிக்கா என தொடங்கி இப்போது இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, விசா நடவடிக்கைகளில் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது இந்திய அரசு. அதனால் 'கோப்ரா' படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, இந்தியா திரும்புகிறது படக்குழு.
இது தொடர்பாக 'கோப்ரா' இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பதிவில் "'கோப்ரா'வுக்கு கரோனா தாக்குதல். பயணத் தடை வித்திருக்கும் இந்திய அரசாங்கத்தின் விதிமுறைகளால் ரஷ்ய படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்துகிறோம். போங்கய்யா நீங்களும் உங்க கரோனாவும்” என்று தெரிவித்துள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இந்தப் படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லலித் குமார் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.