தமிழ் சினிமா

'ஓ மை கடவுளே' படக்குழுவினரைப் பாராட்டிய சிம்பு

செய்திப்பிரிவு

சமீபத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஓ மை கடவுளே' படக்குழுவினரைத் தொலைபேசி வாயிலாகப் பாராட்டியுள்ளார் சிம்பு

அஸ்வந் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இந்தப் படத்தை பிப்ரவரி 14-ம் தேதி வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இதனிடையே, 'ஓ மை கடவுளே' பார்த்துவிட்டு இயக்குநர் அஸ்வந் மாரிமுத்து மற்றும் அசோக் செல்வன் இருவரையும் தொலைபேசி வாயிலாகப் பாராட்டியுள்ளார் சிம்பு. இது தொடர்பாக அஸ்வந்த் மாரிமுத்து தனது ட்விட்டர் பதிவில் “எஸ்டிஆர் அழைத்தார். படத்தைப் பற்றி ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார். மனப்பூர்வமாகப் பாராட்டினார். நான் எழுதும்போது வைத்திருந்த நிறையச் சிறு சிறு விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார். அதைப் பற்றி அவர் விரிவாகப் பேசும்போது நான் ஆச்சரியமடைந்தேன். எவ்வளவு எளிமையான மனிதர். சிறந்த உரையாடல்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அசோக் செல்வன் தனது ட்விட்டர் பதிவில் "சக நடிகரை மொபைலில் அழைத்துப் பாராட்டப் பெரிய மனது வேண்டும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உண்மையான மனப்பூர்வமான உரையாடல். சீனியர் ஜூனியர் உரையாடல் போலத்தான் இருந்தது. நன்றி சிம்பு சார். நீங்கள் பெரிய மனம் கொண்டவர். நீங்கள் சொன்னதை என்றும் மறக்க மாட்டேன். ரசிகர்கள் உங்களை இவ்வளவு விரும்புவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஓ மை கடவுளே (சொன்ன) தருணம்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT