என்னை அழைத்துப் பேச கமலுக்கு நேரமில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
'உத்தம வில்லன்' பட வெளியீட்டின் போது பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ். இந்தப் படத்தின் வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குப் படம் பண்ணித் தருவது அல்லது அடுத்த பட வெளியீட்டின் போது கொடுத்துவிடுவது என ரூ.10 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் கமல் வாங்கியதாகத் தெரிவித்தார் ஞானவேல் ராஜா. இப்போது வரை எந்தவொரு பதிலுமே கூறவில்லை என்று புகாரும் அளித்தார்
இந்தப் புகாருக்கு கமல் தரப்பு மறுப்பு தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக கமல் வாங்கியதற்கான விவரங்களையும், ஆதாரங்களையும் அளிக்குமாறு தெரிவித்துக் கொள்கிறோம் என்று ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்குப் பிறகு இது தொடர்பாக கமல் - ஞானவேல் ராஜா எதையுமே பேசாமல் இருந்தார்கள்.
இதனிடையே, ஞானவேல் ராஜா 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கமலுக்கும், தனக்கும் இடையேயான பிரச்சினை என்னவென்று தெரிவித்துள்ளார். அது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளும், பதிலும்!
’உத்தம வில்லன்’ படத்துக்காக ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனலுக்கு பத்து கோடி ரூபாய் கொடுத்ததாக நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை கமல்ஹாசன் மறுத்ததற்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே
அப்போது பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அப்போது என் நேரம் சரியில்லை என்று நினைத்தேன். ஆனால் இந்த விஷயத்தை சட்டப்பூர்வமாக எடுத்துச் செல்வேன். இந்த விஷயம் மிகவும் எளிமையானது. மறைந்த சந்திரஹாசன் அவர்களின் உத்தரவாதத்தின் பேரில் 10 கோடி ரூபாயை முதலீடு செய்தோம். அதற்கான ஆவணம் எங்களிடம் உள்ளது. அவர் எங்களுக்கு இன்னும் சில விஷயங்களை உறுதி அளித்திருந்தார்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் லிங்குசாமியும் தானே கமல்ஹாசனிடமிருந்து படத்தை வாங்கினார்கள்?
ஆமாம், லிங்குசாமி அப்போது என்னுடன் ஒரு தொடர் ஒப்பந்தம் செய்து கொண்டார். சந்திரஹாசன் அவர்களுக்கும் இது தெரியும். தயாரிப்பாளர் கவுன்சில் சந்திப்பில் அவர் இருந்தார். என் தரப்பிலிருந்து தான் பண முதலீடு வந்தது என்பது தெரிந்துதான் அவர் கடிதம் தந்தார். இப்போது கமல்ஹாசனை யாரோ தவறாக வழி நடத்துகிறார்களோ என்னவோ. சந்திரஹாசன் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நான் அவரை சந்தித்துத் தெளிவுபடுத்தியிருப்பேன்.
கமல் உங்களிடம் எதுவும் பேசவில்லையா?
ஓ அவர் அரசியலில் பிசியாக இருக்கிறார். எனது எண் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியாதா (சிரிக்கிறார்)