தமிழ் சினிமா

சமூக ஊடகத்தில் இணைய விரும்பவில்லை; போலி அறிக்கைக்குச் சட்ட நடவடிக்கை: அஜித்

செய்திப்பிரிவு

சமூக ஊடகத்தில் இணைய விரும்பவில்லை என்றும், தனது கையெழுத்தில் வெளியான போலி அறிக்கைக்குச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஜித் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 6-ம் தேதி மாலை ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானது. இது தொடர்பாக அஜித் தரப்பில் விசாரித்த போது, "அந்த அறிக்கை போலியானது" என்று தெரிவித்தார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

''நடிகர் அஜித் குமாரின் சட்ட ஆலோசகர்கள் நாங்கள் (இனிமேல் அவர் எங்கள் கட்சிக்காரராகக் கருதப்படுகிறார்). மேலும், இந்த நோட்டீஸை அவரது அறிவுறுத்தலின் பேரிலும் மற்றும் அவரது சார்பாகவும் நாங்கள் வெளியிடுகிறோம்.

மார்ச் 6, 2020 தேதியில் அஜித் குமார் வெளியிட்டதாகக் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரபூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது. அந்தக் கடிதம் அஜித் குமாரின் பெயருடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு மேலும், அவரது போலிக் கையொப்பத்தையும் இணைத்திருப்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சியளிக்கிறது.

அந்தக் கடிதம் அஜித் குமாரால்வெளியிடப்படவில்லை என்றும், அந்தக் கடிதத்தில் தெரிவித்த கருத்துகள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறார்.

அஜித் குமார் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகளும் இல்லை என்றும், சமூக ஊடகங்களின் எந்தவொரு அதிகாரபூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் கீழ்க்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.

* அவருக்கு அதிகாரபூர்வ சமூக ஊடகக் கணக்குகள் எதுவும் இல்லை.

* அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.

* சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தின் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை

* மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக் கூறி வந்த இந்தப் போலிக் கடிதத்தையும் அவர் வெளியிடவில்லை.

இறுதியாக, தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார்''.

இவ்வாறு அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT